மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு.சந்தோஷ் குமார் கங்குவார் தலைமையில், 05.12.2018 அன்று நடைபெற்ற இ.எஸ்.ஐ. நிறுவனத்தின் 176-வது கூட்டத்தில் அதன் சேவை வழங்கும் நடைமுறையை மேம்படுத்துவதற்கான சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதிகப் பயன்பாடு இல்லாத இ.எஸ்.ஐ.சி மருத்துவமனைகளில் புறநோயாளிகளிடம் பத்து ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டு காப்பீடு இல்லாதவர்களுக்கும், மருத்துவ சேவை வழங்குவது என இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. உள்நோயாளிகளைப் பொறுத்தவரை சி ஜி எச் எஸ் கட்டணத்தில் 25 சதவீதம் பெறப்படும். சோதனை அடிப்படையிலான இந்த ஓராண்டுகாலத் திட்டத்தில் மருந்துகள் நிர்ணயித்த விலையில், வழங்கப்படும். மிகக் குறைந்த செலவில், சாமானிய மக்களுக்குத் தரமான மருத்துவ வசதி இதன் மூலம் கிடைக்கும். இது தவிர மருத்துவமனை ஆதாரங்களை மக்கள் நலனுக்கு முழுமையாகப் பயன்படுத்துவதையும், இது உறுதி செய்யும்.
சமூகப் பாதுகாப்பு அலுவலர், காப்பீட்டு மருத்துவ அலுவலர் நிலை -2, இளநிலைப் பொறியாளர்கள், ஆசிரியர்கள், துணை மருத்துவர் மற்றும் செவிலியர்கள், யுடிசி, சுருக்கெழுத்தர் போன்ற பல்வேறு வகைகளில் 5,200 பணியிடங்களை நிரப்ப இ.எஸ்.ஐ.சி. நடவடிக்கை எடுத்து வருகிறது.
இ.எஸ்.ஐ.சி. மருத்துவமனைகள் சிலவற்றில் சிறப்பு / உயர்சிறப்பு மருத்துவர்கள் பற்றாக்குறையை சமாளிக்க மயக்கமூட்டுதல், மருத்துவம், அறுவை சிகிச்சை, குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு சார்ந்த மருத்துவர்கள், முடநீக்கியல், இருதயவியல், சிறுநீரகவியல், புற்றுநோய் மருத்துவம் ஆகியவற்றுக்கு திறந்த ஒப்பந்தப் புள்ளிகள், அறிவிக்கப்பட்டு பின்னர், ஒப்பந்த அடிப்படையில் சிறப்பு / உயர் சிறப்பு மருத்துவர்களைப் பணியமர்த்திக் கொள்ள இ.எஸ்.ஐ.சி. ஒப்புதல் அளித்துள்ளது.
தேசிய அளவிலான குறைந்தபட்சக் கூலி, ரூ.176ஆக உயர்த்தப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு ஊழியர்களுக்கான பங்களிப்புத் தொகை விதிவிலக்கு உச்சவரம்பை ரூ.137லிருந்து ரூ.176ஆக அதிகரிக்கவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளர் திரு ஹீராலால் சமாரியா, இ.எஸ்.ஐ.சி. தலைமை இயக்குநர் திரு.ராஜ்குமார்,
ஊழியர்கள் மற்றும் வேலை அளிப்போரின் இ.எஸ்.ஐ.சி. பிரதிநிதிகள், அதன் உறுப்பினர்கள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

perunduraihrforum@gmail.com
No comments:
Post a Comment