ஜவுளித்தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக்கொள்கை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக மாநில அளவில் இயங்கும் தொழில் அமைப்பு பிரதிநிதிகளை அழைத்து சென்னையில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஒட்டுமொத்த பின்னலாடை தொழிலில் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்கும் வகையில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் இக்கூட்டத்தில் பல்வேறு கோரி க்கைகள் முன்வைக்கப்பட்டன
பின்னலாடை நிறுவனத் தொழிலாளர்கள் ஓவர் டைம் வேலை பார்த்து, கூடுதல் வருவாய் ஈட்டுவதை பெரிதும் விரும்புகின்றனர். தொழிலாளர் தயாராக இருந்தும், தொழிற்சாலைகள் உரிய ஏற்பாடுகளை செய்தாலும், சட்ட விதிமுறைகள் முட்டுக்கட்டையாக இருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி ஒரு காலாண்டில் 75 மணி நேரம் ஓவர் டைம் வேலை பார்க்க அனுமதிக்கப்படுகிறது.உற்பத்தியை குறித்த நேரத்தில் முடிக்கவும், தொழிலாளர் கூடுதல் வருவாய் பெறவும் வசதியாக ஓவர் டைம் நேரத்தை 115 மணி நேரமாக அனுமதிக்க வேண்டும். மகாராஷ்டிராவில் இத்தகைய நடைமுறை 2015 முதல் அமலில் உள்ளதால் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
பின்னலாடை தொழிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து தொழிலாளர் வருகின்றனர். திறன் பயிற்சி பெற்ற தொழிலாளரால் உற்பத்தியை நேர்த்தியாக முடிக்க முடியும். அரசு திட்டங்கள் வாயிலாக, தொழிலாளர், தொழில் முனைவோர் திறன் பயிற்சி திட்டங்களை விரிவாக்கம் செய்ய வேண்டும். தேவையான தங்குமிட வசதியை உருவாக்க வேண்டும். ஏற்றுமதி நிறுவனங்கள் 60 கி.மீ., தொலைவு வரையில், பஸ் இயக்கி தொழிலாளர்களை அழைத்து வருகின்றன. இதனால் ஒட்டுமொத்த உற்பத்தி செலவு எகிறிவிடுகிறது. தமிழக அரசின் போக்குவரத்துக்கழகம், தொழிலாளர் வந்து செல்லும் வழித்தடங்களை கணக்கிட்டு காலை மற்றும் மாலை நேரத்துக்கு மட்டும் பதிவு செய்த தொழிலாளருக்காக சிறப்பு பஸ் இயக்கினால் போக்குவரத்து கழகத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். தொழில்துறையினரின் செலவுகளும் கட்டுக்குள் வரும். அதாவது வாடகை வாகனங்கள் போல் போக்குவரத்து கழகமே இயக்க திட்டமிடலாம்.
No comments:
Post a Comment